செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் கன்னட ரீமேக் படத்தில் விஜய் அல்லது தனுஷ் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செளந்தர்யா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சர்க்கஸ் என்ற கன்னட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கணேஷ் கதாநாயகனாகவும், அர்ச்சனா குப்தா (வேகம் பட நாயகி) கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தயாள் தயாரித்து, டைரக்டு செய்துள்ளார்.
ரூ.5.5 கோடி செலவில் படம் தயாரான இந்தப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் ஓடும் ரயிலில் 30 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பார்க்க விரும்பினார். அவருக்காக சென்னை போர் பிரேம்ஸ் தியேட்டரில் அந்த படம் திரையிடப்பட்டது.
தாமதமாக…:
செளந்தர்யா கொஞ்சம் காலதாமதமாக படத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் ஒரு `ரீல்’ ஓடிவிட்டது. என்றாலும் செளந்தர்யா படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்தபின், அவருக்காக முதல் ஒரு ரீல் மீண்டும் திரையிடப்பட்டது.
சர்க்கஸ் படம், அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதே படத்தை தமிழில் தயாரிப்பதற்கான உரிமையை செளந்தர்யா வாங்கிவிட்டார்.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தமிழில் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விஜய், தனுஷூடன் பேசி வருகிறோம். உறுதியான பிறகு அறிவிப்போம் என்றார் செளந்தர்யா.
செளந்தர்யா இப்போது தன் தந்தை ரஜினி நடிக்கும் சுல்தான் தி வாரியர் எனும் அனிமஷன் படத்தை ரூ.70 கோடி செலவில் 8 மொழிகளில் தயாரித்து இயக்கி வருகிறார். அடுத்து கோவா என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிக்கிறார்.
அஜீத்தை வைத்து பில்லா-2 எடுக்க திட்டமிட்டார். ஆனால் அதிலிருந்து அஜீத் திடீரென்று விலகிக் கொள்ள அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது விஜய்யை வைத்து சர்க்ஸை எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
0 comments:
Post a Comment