நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் இந்நாள்! இந்த நன்னாளில் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த எழுச்சித் திருநாளில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, ஊமைகளாய், உரிமைகளை மறந்திருந்த மக்களை தட்டி எழுப்பி, படை பல வந்திடினும், தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்ற வீர உணர்வை ஊட்டி, முதன் முதலில் சுதந்திர விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்; வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன்; தீரன் சின்னமலை; செக்கிழுத்த செம்மல்' சிதம்பரனார்; தீரர் சத்தியமூர்த்தி; மகாகவி பாரதியார்; வீரமங்கை வேலுநாச்சியார்; சுப்ரமண்ய சிவா; கொடிகாத்த குமரன்; வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதன்; புரட்சி வீரர் பகத் சிங்; மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்; தில்லையாடி வள்ளியம்மை; தேவர் திருமகனார்; மருது சகோதரர்கள் போன்ற எண்ணற்ற தியாகச்சீலர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், வறுமை இன்னமும் மக்களை வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது! ஏழ்மை என்ற நிலை இந்தியாவில் இல்லை என்று சொல்லக்கூடிய நாள் வரவேண்டும்! மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை வரவேண்டும்! பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நிலை மாற வேண்டும்!

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும் இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்! பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம்!

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin